கமுதி அக், 31
குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை ஒட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி மற்றும் 61 ஆவது குரு பூஜை கடந்த 28 ம் தேதி தொடங்கியது. ஆன்மிக விழாவை அடுத்து நடைபெற்ற லட்சார்ச்சனையில் பெண்கள் பால்குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டம் சென்றும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை ஒட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதனை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு சென்றார். பின்னர், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் அவருடன் சென்ற முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர்.