நெல்லை ஆகஸ்ட், 20
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும்ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஒண்டிவீரனின் புகழை போற்றும் விதமாக அவரது பெயரில் தபால் தலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று கே.டி.சி.நகர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒண்டிவீரனின் நினைவு தபால் தலையை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட அதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் துணைசபாநாயகர் துரைசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கோவிந்தராஜும் நினைவு பரிசு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், ஞானதிரவியம், சட்ட மன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன், காந்தி, தலைமை தபால் துறை தலைவர் ராஜேந்திர குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த கவர்னர்கள் பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை விருந்தினர் மாளிகை வந்தனர். பின்னர் அங்கிருந்த ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர்.