கீழக்கரை மே, 19
ஆட்சி மாறினாலும் காட்சி மாறா திட்டங்களில் ஒன்றாக அம்மா உணவகம் திமுக ஆட்சியிலும் எவ்வித மாற்றமுமின்றி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவது ஆளும் திமுக அரசுக்கு நல்ல பெயரை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கீழக்கரை அம்மா உணவகத்தின் சீலிங்(மேல்) கூரை சேதமடைந்ததால் 10 நாட்களுக்கும் மேலாக அம்மா உணவகம் செயல்படாமல் இருந்தன.
பழுது நீக்கம் செய்து புதுபொலிவுடன் மீண்டும் அம்மா உணவகம் திறக்கப்படுமென்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. கட்டிட பராமரிப்பு பணி காலதாமதம் ஆவதால் நம்பி வரும் மக்கள் உணவு கிடைக்காமல் ஏமாற்றமடைவதை சுட்டிக்காட்டி நமது வணக்கம் பாரதம் செய்தி வெளியிட்டது.
அம்மா உணவக கட்டிடத்தின் பின்புற வழியாக சாமியானா பந்தல் அமைத்து தற்காலிகமாக அம்மா உணவகம் செயல்பட ஆரம்பித்தது. கட்டிடத்தின் முகப்பு பகுதி விரைவிலேயே சரி செய்து கொடுக்கப்படுமென்று ஒப்பந்ததாரர் வாக்குறுதி கொடுத்தார்.
மேலும் ஒப்பந்ததாரர் கொடுத்த வாக்குறுதிப்படி நான்கு மாதங்களாகியும் பராமரிப்பு பணியை மேற்கொள்ளாமலும் மக்கள் சாப்பிடும் ஹாலில் குப்பைகளை மலை போல் குவித்து வைத்திருப்பதாலும் மின் விசிறி போடப்படாமலும் இருப்பதால் சாப்பிட வரும் மக்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர்.
அம்மா உணவக திட்டத்திற்காக நாளொன்றுக்கு 950 ரூபாய்க்கு காய்கறி வழங்கப்பட தனியார் கடைக்கு ஒப்பந்தம் கொடுத்திருந்தும் சாப்பிடும் மக்களுக்கு காய்கறி எதுவும் போடாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் அம்மா உணவகம் கீழக்கரையில் மட்டும் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படுவது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
கீழக்கரை நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் கவுன்சிலர்கள் தலையிட்டு முடிக்கப்படாமல் இருக்கும் கட்டிட பராமரிப்பு பணியை முடிப்பதற்கும் அங்கே குவித்து வைத்திருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கும் சாப்பிட வரும் மக்களுக்கு காய்கறியோடு உணவு பரிமாறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென SDPI கட்சியின் நகர் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.