ஏப்ரல், 22
இஸ்லாம்களின் 5 கடமைகளான கலிமா, தொழுகை நோன்பு, ஜக்காத் (தானம் செய்தல்), ஹஜ். இவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கிய கடமையாக திகழ்கிறது இதற்கு அடுத்த இடத்தை நோன்பு எனப்படும் விரதம் இருத்தல் கடமை பெற்றுள்ளது.
ரமலான் என அழைக்கப்படும் நோன்பு காலம் முஸ்லிம்களின் வசந்த காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரமலானின் மகத்துவத்தில் நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.
முஸ்லிம்களின் மாதங்களான 12 மாதங்களில் ரமலான் மாதத்திற்குதான் சிறப்பு தன்மைகள் பல உள்ளதாக முஸ்லிம் சான்றோர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
ரமலான் வந்துவிட்டால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் என்பதும், இல்லாதோருக்கு இருப்போர் உதவி செய்தல் என்பதும் அதிகரித்துவிடும்.
ரமலான் நோன்பு இருப்பவர்கள் முதல் பிறைகண்ட பின்னர் தான் தங்களது நோன்பை (விரதமிருத்தலை) தொடங்குகின்றனர்.
நோன்பு இருக்கும் 30 நாட்களும் சூரியன் உதிப்பதற்கு முன்பாக எழுந்து உணவு உண்ண வேண்டும். இந்த நேரத்தை சஹர் உடைய நேரம் என்று அழைக்கின்றனர்.
சூரியன் உதிக்கும் முன்பாக உணவு எடுத் த பின்னர், சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட பருகக் கூடாது. சூரியன் மறைந்த பின்னரே நோன்பு திறக்க வேண்டும்.
நோன்பு திறத்தலை இப்தார் என்று அழைக்கின்றனர். நோன்பு திறக்கும்போது சரியான நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தம ன நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். தாமதம் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.
நோன்பு இருப்பதன் மூலம் உடலின்அனைத்து பாகங்களும் ஓய்வெடுக்கின்றன. குறிப்பாக குடல் எனப்படும் வயிற்றின் முக்கிய உறுப்புக்கள், ஒரு மாதம் ஓய்வு பெறுவதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து மனிதன் காக்கப்படுகின்றான்.
வருடம் ஒன்றின் 365 நாட்களும் உணவு அரைபொருள் நிலையமாக திகழும் மனிதனின் உடல், நோன்பு எனப்படும் 30 நாள் விரதத்தால், ஓய்வு பெறுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்வு பெறுகிறது.
30 பாகங்களைக் கொண்ட குர்ஆனின் அத்தியாயங்கள் அனைத்தும் ஒவ்வொரு இரவு தராவீஹ் தொழுகையின்போது ஓதப்படும்.
ரமலான் மாதத்தில் குர்ஆன் ஓதுபவர்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என முஸ்லிம் சான்றோர்கள் கூறியுள்ளனர்.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்த மாதத்தில் தானம், தர்மம் அதிக அளவில் செய்ய வேண்டும்.
இல்லாதோருக்கு இருப்போர் உதவ வேண்டும். நோன்பு பிடித்துக் கொண்டு மனோ இச்சைப்படி நடப்பதோ, பாவங்களில் ஈடுபடுவதோ மிகப்பெரிய குற்றமாகும். நோன்பு இருப்பவர்களையும் பழித்து பேசக்கூடாது.
நோன்பிருக்கும் காலங்களில் நன்மைகள் செய்து தீமைகளை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோன்பு திறப்பதற்கு தண்ணீர் அல்லாது பேரிச்சம் பழத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோன்பு திறப்பதற்காக ஒவ்வொர ு மசூதிகளிலும், அவர்களின் வசதிக்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்படும். நோன்பு திறப்பவர்களுக்காக அரிசி கஞ்சி விநியோகிக்கப்படும்.
ரமலான் மாதம் நன்மையை மட்டும் போதிக்கவில்லை. ஒற்றுமையையும் போதிக்கிறது. 30 நாட்கள் நோன்பிருந்து, அதன் முடிவில் ரம்ஜான் பெருநாளாக இன்று கொண்டாடப்படுகிறது. அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.