Spread the love

கீழக்கரை மார்ச், 31

நான்கு ஆண்டுகளாக நகராட்சி வாகனங்களுக்கு தகுதி சான்று வாங்காதது ஏன்? கவுன்சிலர் சரமாரி கேள்வி?

கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் பொருள் எண் 10ன் மீது விவாதம் தேவை என 19வது வார்டு கவுன்சிலர் ஷர்ஃப்ராஸ் நவாஸ் எழுந்து தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்.

பொருள்10ல் நகராட்சிக்கு சொந்தமான டிப்பர் லாரி மற்றும் டிராக்டர் நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் போது தனியாருக்கு வாடகைக்கு விடுவதற்காக இரண்டையும் பழுது நீக்கி தகுதி சான்று பெறுவதற்கான உத்தேச செலவு 5 லட்சம் என்பது அதிகம் என்றார்.

நாம் பொறுப்புக்கு வந்து 15 மாதங்களுக்கு மேலாகியும் நகராட்சி வசமிருந்த போது வாகனங்களுக்கு தகுதி சான்று பெறாமல் இருந்து விட்டு தனியாருக்கு தாரை வார்க்கும் போது மட்டும் அவசரம் அவசரமாக தகுதி சான்று பெறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா குறுக்கிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக தகுதி சான்று பெறாமல் தான் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன என்றார்.

நான்கு ஆண்டுகளாக தகுதி சான்று பெறாமல் வாகனங்களை இயக்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? நகராட்சி நிர்வாகம் என கேள்வி எழுப்பிய கவுன்சிலர் நவாஸ், நகராட்சியின் நிதி நிலை நெருக்கடியாக இருக்கும் போது இரண்டு வாகனத்திற்கு தகுதி சான்று பெற 5 லட்சம் என்பது ஏற்க முடியாத செலவினம் என்றார்.

நகராட்சி அதிகாரி பரக்கத்துல்லா குறுக்கிட்டு தகுதி சான்று மட்டுமல்ல வாகன பழுது நீக்கமும் செய்வதற்குத்தான் 5 லட்சம் என பதிலளித்தார்.

தற்போது வரை நல்ல கண்டிஷனில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகளை வலுக்கட்டாயமாக பிரித்து பழுது நீக்க வேண்டிய அவசியம் ஏன்? என தொடர்ந்து வலியுறுத்தியவர் இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றார்.

அலுவலர் பரக்கத்துல்லா குறுக்கிட்டு நகராட்சி வாகனங்களை பழுது நீக்கி,தகுதிச்சான்று பெற்று தனியாரிடம் ஒப்படைக்குமாறு தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனரின் உத்தரவு என்பதால் இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க முடியாது என்று கவுன்சிலரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒப்படைக்கப்படும் நகராட்சி வாகனங்களுக்கு தனியாரிடமிருந்து மாதம் ஒரு லட்சம் வாடகை வசூலிப்பதாகவும், தனியார் வசம் கொடுத்த பிறகு வாகன பழுது நீக்கம்,தகுதிச்சான்று பெறுவது,டீசல் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தனியார் நிறுவனமே மேற்கொள்ள வேண்டுமென்றும் விளக்கமளித்தார்.

1வது வார்டு கவுன்சிலர் பாதுஷா கூறும்போது வார்டு மறுவரையறை செய்து சீராக்கும் வரை எனது எதிர்ப்பினை தொடர்ந்து பதிவு செய்வேன் என்றவர் இன்று கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதாக கூறினார்.

4 வது கவுன்சிலர் சூர்யகலா பேசும்போது ஊர் முழுவதும் பரவலாக காய்ச்சல் இருப்பதால் வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாமை நகராட்சி சார்பில் நடத்திட வேண்டுமென்றார்.

3வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள வாறுகால் பைப் லைன் மோசமாக இருப்பதாக 17வது வார்டு உறுப்பினர் பயாஸுதீன் குற்றம் சாட்டினார்.

18வது வார்டு SDPI கவுன்சிலர் சக்கினா பேகம், எனது வார்டில் எந்த பணியை செய்தாலும் அதனை முழுமையாக செய்யுங்கள் அரைகுறையாக செய்யாதீர்கள் அல்லது எதுவும் செய்ய வேண்டாமென்று கூறினார்.

தலைவர் செஹனாஸ் ஆபிதா குறுக்கிட்டு உங்கள் வார்டுக்கான அனைத்து பணிகளையும் விரைவில் முடித்து தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தவர் பத்திரிக்கையாளர்கள் எனது பதிலையும் பதிவு செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

18 வது வார்டு Unicode 1 சேரான் தெரு என குறுப்பிட்டு 200 சதுரஅடி ஃபேவர்பிளாக் சாலைக்கு 5.27 லட்சம் என்பது கூடுதல் தொகை இதற்கான பில்லை பொதுபார்வைக்கு வைக்க வேண்டுமென்று நகர்மன்ற துணைத்தலைவர் ஹமீதுசுல்தான் அதிகாரிகளை பார்த்து கூறினார்.

தொடர்ந்து 18வது வார்டு கவுன்சிலர் இரண்டு சந்துக்குமான ஃபேவர்பிளாக் சாலை அமைக்க கோரி வலியுறுத்தி வருவதை கண்டும் காணாமலும் செல்ல முடியாது உடனடியாக அந்த பகுதிக்கு ஃபேவர்பிளாக் சாலை அமைத்து கொடுக்க வேண்டுமென துணைத்தலைவர் ஹமீது சுல்தான் கடிந்து கொண்டார்.

புதுகிழக்குத்தெரு பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்க்ப்படுவதால் அதற்கு அவசரகால நடவடிக்கை தேவை என்று 10வது வார்டு கவுன்சிலர் பவித்ரா கோரிக்கை வைத்தார்.

முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோட்டினை நகராட்சி பொறுப்பில் எடுத்து போக்குவரத்தை சீர் செய்யவேண்டும்,வார்டு குளறுபடிகளால் எந்த பகுதி எந்த கவுன்சிலருக்கானது என்பது கூட தெரியாத நிலை நீடிப்பதால் வார்டு எல்லையை குறிக்கும் தகவல் பலகை அமைக்க வேண்டுமெனவும்,நகராட்சி குத்தகைதாரர் வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்வதை தடுப்பதோடு மீறி வசூல் செய்தால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகர்மன்ற தலைவரிடம் 20 வது வார்டு கவுன்சிலர் ஷேக் உசேன் வழங்கினார்.

14வது வார்டு கவுன்சிலர் சுஐபு பேசும்போது புதிய பேரூந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறையை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் அந்த இடத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேற்கண்ட நிகழ்வுகளை நமது வணக்கம் பாரதம் இதழின் நிருபர் தொகுத்து வழங்கினார்.

ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்

கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *