செங்கல்பட்டு பிப், 4
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சென்னையில் நடந்த ஜி20 மாநாடு கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என 120 பேர் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.
ஐந்துரதம் பகுதியில் அவர்களை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் ஆகியோர் தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, நாதஸ்வர இசையுடன் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.
வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களில் காஞ்சீபுரம் சரக காவல் துணை இயக்குனர் பகலவன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.