Spread the love

திருப்பூர் பிப், 2

முத்தூர் முத்தூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. பவானிசாகர் அணை திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் வரை கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர், சின்ன முத்தூர், ஊடையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பு அளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டன.

மேலும் இப்பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேளாண்மைத்துறை பரிந்துரை செய்த குறைந்த செலவிலும், நீர் நிர்வாகத்திலும் அதிக மகசூல் தரும் திருந்திய நெல் சாகுபடி பணிகளும் மற்றும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாதாரண முறையிலான நெல் சாகுபடி பணிகளும் முழுவீச்சில் தொடங்கப்பட்டு நடைபெற்றன. இதன்படி நெல் நாற்றுக்கள் சேற்று உழவு பணிகள் மூலம் நடப்பட்டு பயிர் பாதுகாப்பு மேலாண்மை, உர மேலாண்மை, களை எடுத்தல், நீர் மேலாண்மை ஆகிய பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு வேளாண் வயல்களில் நெல் நாற்றுகளாக நடப்பட்ட நெற்பயிர்கள் பச்சை, பசேல் என்று கடந்த 6 மாதங்களாக நன்கு வளர்ந்து அதில் நெல் மணிகள் உருவாகி பழுப்பு நிறத்திற்கு மாறி அறுவடைக்கு தயாராக இருந்தன. அறுவடை பணிகள் தொடக்கம் இந்த நிலையில் இப்பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.

இதன்படி திருப்பூர், ஈரோடு. கரூர், தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த கூலி ஆட்கள், சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் நெல் அறுவடை எந்திரம் மூலம் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கடந்த வாரம் முதல் புதிதாக திறக்கப்பட்டு உள்ள அரசு நேரடி 3 நெல் கொள்முதல் மையங்களுக்கு கொண்டு சென்று விற்று பலன் அடைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *