தஞ்சாவூர் டிச, 21
பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15 ம்தேதியும், 16 ம்தேதி மாட்டு பொங்கலும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் மண்பானைகள், அடுப்புகள் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மண்பானைகள் ரூ.90 முதல் ரூ.500 வரையிலும், மண் அடுப்புகள் ரூ.90 முதல் ரூ.150 வரையிலும் விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன. மண்பாண்ட பொருட்கள் செய்வதற்காக களிமண்ணில் உள்ள கற்களை அகற்றிட வேண்டும்.பின்பு மண்ணை முறையாக காயவைக்க வேண்டும். பின்னர் அன்னக்கூடை போன்ற சல்லடைகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
அதைத்தொடர்ந்து 5 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். பின்னர் அந்த மண்ணைக்கொண்டு அகல்விளக்கு, மண்பானை, மண் அடுப்பு உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.