Spread the love

சென்னை ஆகஸ்ட், 8

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, நேற்று கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் நேரடியாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, இந்தியா உள்பட 10 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் தமிழகம் உள்பட 19 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பதிவு செய்திருந்தனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்காக 10 ஆயிரத்து 985 பேர் பெண்கள் உள்பட மொத்தம் 43 ஆயிரத்து 320 பேர் பதிவு செய்து இருந்தனர்.

மாரத்தான் போட்டியானது 42 கிலோ மீட்டர் பிரிவு, 21 கிலோ மீட்டர் பிரிவு, 10 கிலோ மீட்டர் பிரிவு, 5 கிலோ மீட்டர் பிரிவு என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதன்படி, நேற்று அதிகாலை 4 மணிக்கு, 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதிகாலை 4.30 மணிக்கு, 21 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தொடங்கி வைத்தார். அதிகாலை 5 மணிக்கு, 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை நகராட்சித்துறை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

இறுதியாக காலை 7 மணிக்கு, 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை திமுக. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், அமைச்சர்கள் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஓட்டப்பந்தய வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்னை பெசன்ட் நகரில் நேற்று அதிகாலை 2 மணி முதலே குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாரத்தான் போட்டி நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க நாட்டு துணை தூதர் ஜூடித் ரவின், பிரிட்டிஷ் நாட்டு துணை தூதர் பால் ஜெ.டிரைடன், ஜப்பான் நாட்டு துணை தூதர் டகா மசயுகி சான், பிரான்ஸ் நாட்டு துணை தூதர் புருனோ நுயென் ஆகியோருக்கும் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கினார். நிறைவாக, மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி, தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையையும் வழங்கினார்.

கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நிறைவு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, சுப்பிரமணியன், ரகுபதி, பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், கயல்விழி, பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை உடனே படிக்க.

http://www.vanakambharatham24x7news.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *