கள்ளக்குறிச்சி நவ, 17
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தினர். கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.