மதுரை நவ, 6
சென்னையில் ஆசியாவில் 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010-ம் ஆண்டு திறந்து வைத்தார். இந்த நூலகத்தை போல தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3 ம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. மதுரை புதுநத்தம், ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இரவு, பகலாக பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நூலக கட்டிடம் 90 சதவீத பணிக்கு மேல் நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்த நூலகம் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.