Spread the love

கோவை நவ, 1

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.

இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை-கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்படுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் தமிழகம்-கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபாலபுரம், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *