Spread the love

கீழக்கரை அக், 27

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி முக்கு ரோடு பகுதியில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் விஸ்வகர்மா சாதியை சேர்ந்தவர் என்று கூறி MKT பேரவை சார்பில் போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பிரதமராக அறிவிக்கப்பட்டார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். பிரிட்டன் சட்டப்படி நாட்டின் மூன்றாம் மன்னர் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து நேற்று சார்லஸை சந்தித்து பிரதமராக பதவியேற்ற சுனக், நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீரமைப்பேன் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற கையோடு ரிஷி சுனக்கின் சாதியை தேடும் வேலையை இந்தியர்களிடையே ஆரம்பமாகிவிட்டது. ரிஷி சுனக் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இல்லாததால் ஆளாளுக்கு ஜாதியை காரணமாக காட்டத் தொடங்கி விட்டனர் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது இரண்டாம் பெயரான சுனக் என்பது சாதி பெயர் இல்லை எனவும் அங்குள்ள ஏராளமான மக்கள் இந்த பெயரை வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை MKT பேரவை, விஸ்வகர்மா சமுதாயம் என்று குறிப்பிடப்பட்டு உள்ள அந்த போஸ்டரில், ‘இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எங்கள் விஸ்வகர்மா வழித்தோன்றல் மாண்புமிகு ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்கள்.’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் அதிகம் வசிக்கின்றனர். வட மாநிலங்களிலும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தச்சர், பொற்கொல்லர் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால், ரிஷி சுனக்கின் சாதியை பற்றி எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்திய வம்சாவளி என்பதில் கூறும் பெருமை, ஜாதியை அடிப்படையாகக் கொண்டு வருவதில்லை. இது நன்கு தெரிந்தும் பல அரசியல் முகங்கள் ஜாதியை காரணமாக காட்டி வருவது எவ்விதத்தில் நியாயம் என்பது இன்னும் புலப்படாத உண்மையாகவே விளங்குகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து பிரதமராக இருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்பதில் மட்டும் பெருமை கொள்வோம் அதனைத் தாண்டி ஜாதியை காரணம் காட்டி பிரிவினை ஏற்படுத்தி அரசியல் லாபம் காண்பதை தவிர்த்தால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *