Spread the love

சென்னை அக், 24

ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் அது கொண்டாடப்படுவதற்கு ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகளும் வரலாற்று கதைகளும் இருக்கின்றன.

தீபாவளி என்பதன் பொருள்
தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளி.

ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும் அந்த முதல் ஒளியே பரமாத்மா அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள், ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும்.

இந்த உண்மையை உணர்த்தும் வகையில்தான் ஒளிவிளக்கு திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது.

நரகாசூரன் இறந்த நாளை எண்ணை தேய்த்து குளித்து, தீபம் ஏற்றி கொண்டாடப்படுவதாக காலம் காலமாக சொல்லப்படும் கதை.

ராமன்- சீதா வனவாசம் முடித்து நாடு திரும்பிய பின்பு மக்கள் அவர்களை வரவேற்பதற்காக தீபம் ஏற்றி கொண்டாடினர் என ஒரு கதை உண்டு

ஐப்பசி மாத அமாவாசை முன் வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அதனடுத்த கார்த்திகை சுக்கில பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்ட நாட்களாகும்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்லப்படுகின்றது. அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுகின்றது.

அன்றைய தினம் எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர் நிலைகளிலும் “கங்கா தேவி” வியாபித்து நிற்பதாக ஐதீகம் இந்நாளில் எண்ணெய் தேய்த்து நீராடுவோர் கங்கையில் நீராடிய புண்ணியத்தையும் திருமகளின் அருளையும் பெறுவர்.

தீபாவளித் திருநாளில் பிரிந்து வாழும் பல குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. பகை உணர்வுகளை மறந்து ஒற்றுமையே மேலோங்குகின்றது. அனைவரும் புத்தாடை அணிந்து பலகாரம் பகிர்ந்து, சிறுவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்வுடன் தீபாவளி கொண்டாடுவர்.

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை வணக்கம் பாரதம் 24×7 மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *