.துபாய் அக், 15
ஐக்கிய அரபு அமீரக துபாயில் நடந்த சர்வதேச வர்த்தக குழுமத்தின் 2 வது சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என பேசினார்.
சர்வதேச வர்த்தக குழுமம்:
துபாயில் உள்ள தனியார் ஓட்டலில் சர்வதேச வர்த்தக குழுமத்தின் 2 வது சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் தலைமை விருந்தினர்களாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் ஆட்சியாளர் குடும்பத்தை சேர்ந்த அமீரக தொழிலதிபர் ஷேக் கலீபா பின் ஹஷெர், பின் கலீபா அல் மக்தூம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்திய துணைத் தூதரகத்தின் பாஸ்போர்ட், கல்வி மற்றும் சான்றிதழ் பிரிவின் அதிகாரி ராம்குமார், தமிழ்நாடு எல்காட் அரசு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அஜய் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச வர்த்தக குழுமத்தின் தலைவரும், அமீரக திமுக அமைப்பின் தலைவருமான அன்வர் அலி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சர்வதேச வர்த்தக குழுமம் குறித்த அறிமுகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை சர்வதேச வர்த்தக குழுமத்தின் பொதுச்செயலாளர் ஷாநவாஸ் வழங்கினார்.
இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் ஆற்றிய உரையில்,தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளது. ஆண்டுக்கு 4 லட்சம் பொறியாளர்களை உருவாக்குகிறோம். அதேபோல கலை, அறிவியல், டிப்ளமோ படிப்புகளை படித்து பட்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வொயிட் காலர் ஜாப்ஸ் என சொல்லக்கூடிய வேலைவாய்ப்புகள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளது.
இதில் பலரும் வெளிநாடுகளுக்கு தாயகத்தில் இருந்து சென்று விடுவது பெரிய இழப்பாகும். அதேபோல தமிழ்நாட்டில் எத்தனை பேர் வந்தாலும் வேலை வாய்ப்பளிக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல மறுபக்கம் பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து காணப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு சார்பில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெற உதவி செய்து வரப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த பிறகு தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் ஒத்துழைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல போக்குவரத்தில் தரைவழி, வான்வழி மற்றும் துறைமுகங்களை இணைக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.உள்புற சாலைகள், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு கிராமங்களிலும் கூட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவ வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.எளிதாக தொழில் புரியும் மாநிலங்களில் 24 ம் இடத்தில் இருந்து கடந்த ஒரு ஆண்டில் தமிழகம் 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.தமிழ்நாட்டில் நிலையான அரசு உள்ளது. எளிதாக அனைவரையும் அணுகி தொழிலை தொடங்க முடியும். இது போன்ற காரணங்களால் தொழில்துறை முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 250 அரசு சேவைகளுக்கு ஆன்லைன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இன்றும் பல அலுவலகங்களில் காகித பயன்பாடு இருந்து வருகிறது. அதற்காக அனைத்து பகுதிகளிலும் இ சேவை மையத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமை செயலகத்தில் சுமார் 3,245 பணியாளர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.வரும் காலத்தில் சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும் என்றும் இப்போது முதல் முறையாக தமிழ்நாட்டில் இருந்து அரசு குழு துபாய் ஜிடெக்ஸ் தொழில்நுட்ப கண்காட்சிக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள வர்த்தகர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் இந்த சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் அன்வர் அலியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல அவர் இங்கு தமிழ்மொழியை பயிற்றுவிக்க ஒரு மையத்தை ஏற்படுத்தி தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாய்மொழியை மறக்காமல் இருக்க அதற்கு முக்கியத்துவம் அளித்து பிள்ளைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும்.என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் வசிக்கும் தமிழ் தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர். இறுதியாக சர்வதேச வர்த்தக குழுமத்தின் இணை செயலாளர் ராஜா செல்வராஜ் நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பு பணிகளை சர்வதேச வர்த்தக குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.