Spread the love

ராமேஸ்வரம் அக், 12

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து பாம்பன் சாலை பாலத்தில் சென்று கொண்டிருந்தது. பாம்பன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கார் மற்றும் வேன்களை வழித்தடத்தில் நிறுத்தி வைத்து விட்டு கடலை ரசித்துக்கொண்டிருந்தனர். இதனால் பாலத்தில் நின்றிருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள்மீது மோதி விடக்கூடாது என்பதற்காக எதிர்சாலையில் பேருந்தை இயக்கியிருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்துமீது நேருக்கு நேர் மோதியது. அதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து பாம்பன் பாலத்தின் நடைமேடையில் ஏறி கடலுக்குள் விழுவது போல் சென்றிருக்கிறது. அப்போது சுதாரித்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் பிரேக்கை அழுத்திப் பிடித்து தடுப்புச் சுவர்மீது மோதியபடி மயிரிழையில் கடலுக்குள் பேருந்து விழாமல் நிறுத்தினார்.

இதனைப் பார்த்த அங்கிருந்த மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாம்பன் பாலத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உதவியுடன் பேருந்துக்குள் கால் சிக்கி வலியில் போராடிக் கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரை மீட்டனர்.

இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் வந்த ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட ஏழு பேர் மற்றும் ஆம்னிப் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் ஆம்னிப் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு பேருந்து கடலில் விழாமல் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *