பரமக்குடி அக், 1
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காரடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கும் விழா நடந்தது.
இவ்விழாவிற்கு நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா, காரடர்ந்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால் ஆகியோர் தலைமை தாங்கினர். பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் காளிதாஸ், நயினார் கோவில் ஒன்றிய செயலாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். சட்ட மன்ற உறுப்பினர் முருகேசன் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்மடூர் ஊராட்சி துணைத்தலைவர் ராமு, கிளைச் செயலாளர் முருகவேல், மாரியப்பன், நயினார்கோவில் ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராமு, திலகர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.