பர்மிங்காம் ஆகஸ்ட், 3
லான்பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று சாதித்த இந்திய மகளிர் அணியின் பதக்கம் உட்பட 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில், லான் பவுல்ஸ் விளையாட்டில், இந்திய மகளிர் ஃபோர்ஸ் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. லான் பவுல்ஸ் விளையாட்டின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17-10 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா, ரூபா ராணி டிர்கி ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்றது. வலுவான தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள், இந்தியாவிற்காக லான் பவுன்ஸ் விளையாட்டில் முதல் தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 17 – 10 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் லான் பவுல்ஸ், பளுதூக்குதல் ஆகியப்போட்டிகளில் இந்தியர்கள் புதிய சரித்திரம் படைத்தனர். ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியா – சிங்கப்பூர் அணிகள் மோதின.
இறுதியில் 11 – 7, 12 – 14, 11 – 3, 11 – 9 என்ற புள்ளிக்கணக்கில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. பளுதூக்குதல் போட்டியில் விகாஸ் தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தற்போது வரை இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை பெற்று, பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா 74 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இங்கிலாந்து 60 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளது.