நாமக்கல் செப், 14
நாமக்கல் நகர் கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் அதிக நேரம் மின்தடை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்ட மன்ற உறுப்பினர் ராமலிங்கம் முயற்சியால், மாருதிநகர் மின்பாதை மற்றும் அணியாபுரம் மின்பாதைகளுக்கு இடையே சுமார் ரூ.7½ லட்சம் மதிப்பீட்டில் புதிய இணைப்பு மின்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இந்த புதிய மின்பாதையை சட்ட மன்ற உறுப்பினர் ராமலிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக. தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், இளம்பரிதி, மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தபாபு, பிரேம்நாத், சவுந்திரபாண்டியன், உதவி பொறியாளர்கள் சந்திரன், கார்த்தி, சிறப்பு நிலை முகவர்கள் கோபாலகிருஷ்ணன், கணேசன், சசிக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், உமாசங்கர், கடலரசன் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 20 ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து இருப்பதால் கொண்டிசெட்டிப்பட்டி, மாருதிநகர் பகுதி மின்நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.