கீழக்கரை ஜூலை, 22
கீழக்கரையில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் தலைதூக்கியுள்ளதை சுட்டிக்காட்டி சமூக நல ஆர்வலர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு நகராட்சி வழக்கறிஞர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமென்றும் நீதிமன்றத்தில் பதிலளித்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் கீழக்கரையின் அனைத்து பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென காலக்கெடு கொடுத்துள்ளது.
இந்நிலையில் கீழக்கரை முஸ்லிம்பஜார் லெப்பை டீ கடை அருகில் இந்த பகுதிகளில் இருசக்கர வாகனம் மட்டுமே நிறுத்த வேண்டும் மற்ற வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகையை பெயரளவில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி வைத்து கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குமுறுகின்றனர்.
இந்த பகுதியில் முக்கியமான வங்கிகள் உள்ளன. வங்கிகளுக்கு வரும் மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்தில் எதையுமே செய்யமுடியாமல் அவதியுறுகின்றனர்.
இத்தகைய போக்குவரத்து நெருக்கடியை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜஹாங்கீர் அரூஸி.
மாவட்ட நிருபர்.