கீழக்கரை மார்ச், 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட முஸ்லிம் பஜார் ஊரின் மையப்பகுதியாகும்.இந்த பகுதியில் தான் முக்கியமான வங்கிகள் உள்ளன.வர்த்தக நிறுவனங்களும் இப்பகுதியில் அதிகமுண்டு.
இந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யும் மின் மாற்றி அண்ட பழசென்றும் காலாவதியாகி போனதென்றும் அடிக்கடி பழுதாகி மின் வினியோகம் தடைபடுவதாகவும் அப்பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று(23.03.2025) இரவு 7.30 மணிக்கு மின் மாற்றி பழுதடைந்து மின் தடை ஏற்பட்டது.மின்வாரிய ஊழியர்கள் சரி செய்ய முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் சென்று விட்டனர்.
இன்று(24.03.2025) வரை மின் மாற்றியில் பழுது நீக்கம் செய்யப்படாமல் தொடர் மின்வெட்டு நீடித்து வருவதால் வியாபாரிகளும் வங்கிக்கு செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். நோன்பு பெருநாள் நெருங்கி வரும் வேளையில் வியாபாரத்தை நம்பியிருக்கும் வியாபாரிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
காலாவதியாகி போன மின் மாற்றியை தூக்கி விட்டு புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மக்களின் துயர் நீக்கப்படுமா?அல்லது கற்காலத்தை நோக்கி மின்வினியோகம் இல்லாத ஊராகுமா?என்பதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.