ஏர்வாடி ஜூன், 1
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அடங்கியிருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுறாகீம் ஷஹீது அவர்களின் 850ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று (31.05.2024)நடைபெற்றது.
சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜிபிர் நல்ல இபுறாகீம் தர்காவில் இருந்து புறப்பட்டு காலை 5 மணிக்கு மகான் குத்பு செய்யது இபுறாகீம் ஷஹீது பாதுஷா நாயகம் அவர்களின் தர்ஹா வந்தடைந்தது.
அனைத்து சமுதாய மக்களின் நல்வாழ்வுக்காகவும் சகோதரத்துவ ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
முன்னதாக சந்தனக்கூடு ஊர்வலத்தில் இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவர் என அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தங்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய நிகழ்வு மத நல்லிணக்கத்தின் அடையாளமாய் திகழ்ந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் சட்டம்,ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புகள் என அனைத்து விசயத்திலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களின் வழிகாட்டல்படி கூடுதல் கவனம் செலுத்திய கீழக்கரை தாலுகா வட்டாட்சியர் பழனிக்குமார் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
சந்தனக்கூடு விழாவினை தர்ஹா நிர்வாக கமிட்டியின் தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான்,செயலாளர் செய்யது சிராஜுதீன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் மிக நேர்த்தியாக செய்திருந்தனர்.
முன்னதாக ஏர்வாடி அண்ணாநகரில் மாவட்ட அரசு காஜி மௌலானா மௌலவி சலாஹுதீன் ஆலிம் அவர்களின் இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனையும் விருந்தோம்பலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல ஊர்களில் இருந்தும் தொழிலதிபர்கள், ஜமாத்தார்கள், ஆலிம்கள், யாத்திரிகர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் எவ்வித பாகுபாடுமின்றி விருந்தோம்பல் நடைபெறுவதாகவும் இது மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் விருந்துக்கு வருகை தந்த ஒரு முதியவர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்