Spread the love

துபாய் ஏப்ரல், 17

வரலாறு காணாத மழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு செல்ல இருந்த 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

ஏப்.15 மற்றும் ஏப்.16ம் தேதிகளில் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதன்படி இடி, மின்னலுடன் மழையும், சூறாவளிக்காற்றும் வெளுத்து வாங்கியிருக்கிறது. மழை காரணமாக துபாயின் மிக முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கியதால் அவை மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் முட்டி அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் வேலையை செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. ஓமனை பொறுத்த அளவில் மழை வௌ்ளத்தில் சிக்கி பள்ளி வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதேபோல மழையில் சிக்கி தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அளவுக்கு பெரும் மழை வெள்ளத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்த மழைக்கு காரணம் செயற்கை முயற்சிகள்தான் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் இயல்பில் அதிக வெப்பம் நிறைந்த பகுதிகளாகும். இங்கு மழையை ஏற்படுத்த செயற்கை முறையில் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் எடுத்த முயற்சிகள் காரணமாக இந்த பெருமழை பெய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மழை வெள்ளம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளத்தில் கார்கள் குப்பைகளை போல மிதக்கும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வீடியோக்களாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, உலகின் இரண்டாவது பிஸியான விமான நிலையமான துபாய் ஏர்போர்ட் முழுவதும் மழை நீர் தேங்கியிருக்கிறது. எனவே ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. விமானங்கள் மழை நீரில் நீந்தியவாறு செல்லும் வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன.

சென்னையிலிருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கான 10 விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மழை குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், “துபாயில் ஆண்டுக்கு 100 செ.மீ மழை பெய்யும். ஆனால், ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை வெறும் 12 மணி நேரத்தில் பெய்திருக்கிறது. எனவேதான் இந்த அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உலகத்தின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டனில் ஏற்பட்ட அதிகபட்ச வெப்பம், பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் மழை ஆகியவை இந்த வெப்பம் அதிகரிப்பு காரணமாகதான் ஏற்பட்டது என்றும் அவர்கள் விளக்கியிருந்தனர்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து பாலைவன தேசமான ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளம் ஏற்பட்டிருப்பது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக இருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *