ஏப்ரல், 6
ஆயுர்வேதத்தில் கருஞ்சீரகத்திற்கு முதல் இடம் உள்ளது. ஏனென்றால் கருஞ்சீரகம் மரணத்தை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் மிக சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நாம் பாரம்பரியமாக நமது சமையலறையில் பயன்படுத்தி வரும் பல பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் என்று நம்மில் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. அந்த வகையில் நமது சமையலறையில் பயன்படுத்தி வரும் கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம்.
கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
நோயெதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த உணவு பொருட்களில் ஒன்று தான் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் என்னும் வேதிப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படுகிறது. கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது. சரி கருஞ்சீரகம் மருத்துவ பயன்கள் பற்றி இப்பொழுது படித்தறியலாம்.
பித்தப்பையில் கல் மற்றும் கிட்னியில் உள்ள கற்களை கரைக்க இந்த கருஞ்சீரகம் மிகவும் பயன்படுகிறது. கருஞ்சீரகத்தை பொடி செய்து கொள்ளுங்கள். பின் ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் பொடியை சேர்த்து நன்றாக கலந்து காலை வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் வரை அருந்திவர வேண்டும். இவ்வாறு செய்வதினால் பித்தப் பையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் கரைய ஆரம்பிக்கும். மேலும் ஜீரண சக்தி மேம்படுவதுடன் வாயு தொல்லை நீங்கி வயிறு சம்மந்தமான எந்த பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.
சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்ற அனைவரும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வர பிரச்சனைகள் குணமாகி உடல் நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படும். இந்த டிப்ஸினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். இருப்பினும் தங்கள் குழந்தைக்கு கொடுக்க தயக்கமாக இருந்தால் தங்கள் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.
தோல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து தோல் நோய் ஏற்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர பிரச்சனை குணமாகும். இவ்வாறு இந்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதினால் தேமல், அரிப்பு, தடிப்பு மற்றும் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும் இதனால் தங்கள் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
மாதவிடாய்க் கோளாறுகளின் போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும் வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.