Spread the love

மார்ச், 17

நோன்பு என்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாக இருக்கிறது. நோன்பு விரதத்தை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே உணவு சாப்பிட்டு ஆரம்பிப்பார்கள். நோன்பானது மிகவும் புனிதம் மிக்கது பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது. சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைக்கவல்லது.

நோன்பு இருப்பதற்கு பொருள்:

நோன்பு எனும் வார்த்தை அரபு மொழியில் ஸவ்மு என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய பொருள் தடுத்து கொள்ளுதல் ஆகும். அதாவது சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து சூரியன் மறையக்கூடிய நேரம் வரையில் எந்த உணவையும் சாப்பிடாமல், தீய செயல்களில் ஈடுபடாமலும் உடல் உள ரீதியில் தம்மை கட்டுப்படுத்தி 30 நாட்களும் நோக்கும் விரதமே நோன்பு என பொருள் கொள்ளப்படுகின்றது.

நோன்பு காலம்:

அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் அவர்களால் அருளப்பட்ட மாதமாக இருக்கிறது இந்த 30 நாள் ரமலான் மாதம். இஸ்லாமிய வருடத்தில் உள்ள 12 மாதங்களில் ரமலான் 9-வது மாதமாக இருக்கிறது. நோன்பு விரதமானது 29 அல்லது 30 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திருநாளினை ஈகை திருநாள், ஈதுல் பிதிர் எனவும் அழைக்கப்படுகிறது.

நோன்பினை எதற்காக இருக்க வேண்டும்:

அன்னத்தை அடக்கியவன் ஐம்புலன்களையும் அடக்குவான் என்று கூறுவர்கள். இவைகளை கட்டுப்படுத்தும் போது நம் மனம் ஞானத்தைத் தேடிச் செல்கின்றது என்பதனை தத்துவ ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர். மேலும் பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்றும் சிலர் கருதுகிறார்கள். இறைவனை அடைவதற்கான வழியெனவும் சிலர் கருதுகின்றனர்.

நோன்பின் நன்மைகள்:

நோன்பு விரதத்தை மேற்கொண்டால் மனதானது ஒரு கட்டுப்பாடு நிலைக்கு வந்து தீய செயல்களிலிருந்து நம்மை விலக்கி நல்வழியில் செலுத்துகிறது. நம்மில் இருக்கும் கோபத்தினை முற்றிலும் இந்த நோன்பு விரதம் குறைக்கிறது.

உடலில் பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, விரதம் மேற்கொள்வதால் அது சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளை நீக்கிவிடும். மேலும், உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், இரத்தத்தை தூய்மைப்படுத்தும்.

ஏனென்றால், உணவு சாப்பிடாத போது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே உடலானது சுத்தப்படுத்திக்கொள்கின்றன.

நோன்பு காலத்தில் விரதத்தை கடைப்பிடித்தால் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்லலாம். நோன்பு காலத்தில் பொய் கூறுதல், மற்றவர்களை இழிவாக பேசுதல், வீண் பேச்சு பேசுதல், புறம் கூறுதல் போன்ற தகாத செயல்களில் ஈடுபடுதல் கூடாது. எனவே இஸ்லாமியரின் நோன்பு மகிமையை நாமும் தெரிந்துகொண்டு பிறருக்கும் உணர்த்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *