கீழக்கரை ஜன, 13
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று(12.01.2024) தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும்,ஆணையாளர் செல்வராஜ்,உதவிதலைவர் ஹமீதுசுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பட்டாணியப்பா சாலையில் உள்ள வாறுகால் இணைப்பு தளத்தை உயர்த்தி ரோடு போடுவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டாணியப்பா சாலை குறித்த தீர்மானத்தின் போது உறுப்பினர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றது.
பைரோஸ்பாத்திமா 6வது வார்டு: பட்டாணியப்பா சாலை எனது வார்டுக்குட்பட்டது எனும்போது இன்னொரு உறுப்பினர் எப்படி தீர்மானம் கொண்டுவரலாம்?
20வது வார்டு உறுப்பினர் சேக் உசேன்: பட்டாணியப்பா சாலையில் தான் எனது வீடும் உள்ளது,வரி வசூல் செய்ய ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி நிர்வாகம் கேட்ட போது பட்டாணியப்பா சாலையில் உள்ள வீடுகளில் வசூல் செய்ய உதவினேன், அந்த வீடுகள் எனது 20 வது வார்டில் வருகிறது அதனால் தீர்மானம் கொடுத்தேன்.
21வது வார்டு உறுப்பினர் சித்திக்: பட்டாணியப்பா சாலை எனது வார்டுக்குட்பட்டது. மக்களுக்கான திட்டங்கள் நிறைவேறும் போது யார் தீர்மானம் கொடுத்தால் என்ன? நல்லது நடக்கும் போது கடந்து செல்வதே சரியாகும் எனக்கூறி பட்டாணியப்பா சாலை குறித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
2வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி: மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதொடர்ந்து எனது வார்டு புறக்கணிப்பதாக உணர்கிறேன்.அதனால் வெளிநடப்பு செய்கிறேன் எனக்கூறி கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்.(குறிப்பு: தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிறை,குறைகள் பேசப்படும் கூட்ட முடிவின் போது வெளிநடப்பு செய்துள்ளார்)
மீரான் அலி 7 வது வார்டு: LED தெருவிளக்குகள் நிலை என்ன? விபரம் வேண்டும்?
பொறியாளார் அருள்: இதுவரை 695 விளக்குகள் மாட்டப்பட்டுள்ளன, இன்னும் 600 விளக்குகள் மாட்டப்பட வேண்டும் பொங்கல் விடுமுறை கழிந்ததும் மீதமுள்ள லைட்டுகளும் மாட்டப்பட்டு விடும்.
மூர் நவாஸ் 19 வது வார்டு: நாம் பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை மக்கள் எதிர்பார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையம்,விளையாட்டு மைதானம்,நூலகம் போன்ற எந்தவொரு திட்டமும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் கண்டு அதனை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை தேவை.
புதிய பேரூந்து நிலையத்தில் அம்மா உணவகம் அருகில் உள்ள ஆண்கள் கழிப்பறை கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் 24 மணி நேரமும் மினி பார் போல சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படுகிறது.
அதனை இடிக்க வேண்டும் அல்லது பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
நசுருதீன் 9 வது வார்டு: கடந்த கூட்டத்தில் என்னை ஒருமையில் பேசிய உறுப்பினர் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டுமென கோரிக்கை வைத்தேன், இதுவரை அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்பதால் அந்த பிரச்சினையை சட்ட ரீதியாக அணுகிகொள்கிறேன்.அவரை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.(கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்)
சேக் உசேன் 20 வது வார்டு உறுப்பினர்: நானும் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பேன்.
சுஐபு 14 வது வார்டு,மீரான் அலி 7வது வார்டு,காயத்ரி 4 வது வார்டு,பைரோஸ் பாத்திமா 6வது வார்டு உறுப்பினர்கள்,கடந்த கூட்டத்தில் 9வது வார்டு உறுப்பினர் நசுருதீனை ஓர்மையில் பேசிய உறுப்பினர் மன்னிப்பு கோராததால் அதனை கண்டித்து நாங்களும் வெளிநடப்பு செய்வதாக கூறி அரங்கில் இருந்து வெளியேறினர்.
பாதுஷா 1வது வார்டு: விடியல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருசில அதிகாரிகள் பாசிஸ சிந்தனையோடு செயல்படுகின்றனர்.தாம்பரம் மாநகராட்சி ஆணையர், அதிரை நகராட்சி ஆணையரின் செயல்கள் கண்டிக்கத்தக்கது.
விவாதங்களுக்குப் பின் தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.