Spread the love

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 22

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. ரஷியா, ஈரான், ஈராக், சைபிரியா நாடுகளில் இருந்து வரும் பூநாரை தனி சிறப்பு வாய்ந்தது. ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து 47 வகையான உள்ளான் பறவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. அதில் கொசு உள்ளான், பச்சை கால் உள்ளான், சிகப்பு கால் உள்ளான், பவளக்கால் உள்ளான் உள்ளிட்டவைகள் அதிக அளவில் வருகின்றன. இலங்கையில் இருந்து கடல் காகம், கடல் ஆலா, ஈரான், ஈரக்கில் இருந்து கூழை கிடா உள்ளிட்ட பறவைகள் சீசன் காலத்தில் அதிக அளவில் வந்து செல்கின்றன.

இந்த சரணாலயத்துக்கு வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளுடன் சொந்த நாட்டுக்கு செல்லும். கடந்த ஆண்டு வந்த பறவைகள் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் இங்கு தங்கி உள்ள பூநாரை, கூழை கிடா, உள்ளான் வகை பறவைகள் ஆயிரக்கணக்கானவை உள்ளன.

இந்தப் பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பைனாகுலர், வழிகாட்டி, வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வனத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வனக்குழுவின் சார்பில் உணவகங்கள் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *