ராமநாதபுரம் செப், 18
நேற்று காலை 9.30 மணிக்கு கீழக்கரை நகராட்சி சார்பில் பள்ளி,கல்லூரி மாணவர் மாணவியர் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,துணைதலைவர் ஹமீது சுல்தான்,ஆணையர் செல்வராஜ் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முகைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூலம் சைக்கிள் பேரணியும் மக்தூமியா மேல்நிலைப்பள்ளி மாணவர்-மாணவியர்,தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவியர் சார்பில் நடை பேரணியும் நடத்தப்பட்டன.
இந்த பேரணியின் போது பிளாஸ்டிக் தவிர்ப்போம் இயற்கை வளம் காப்போம் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.பேரணியில் நகர்மன்ற தலைவர்,துணை தலைவர், கவுன்சிலர்கள், அதிகாரிகளும் நடந்து சென்று மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இப்பேரணியின் நிறைவாக பழைய பேரூந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள கடற்கரை மேடையில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா உறுதி மொழி வாசிக்க அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.
பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற அடைமொழி மணல் சிற்பம் உருவாக்கி இருந்தது அனைவரையும் கவர்ந்தது.
பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல் பகுதியில் கலப்பதால் அதனை மீன் உண்பதின் மூலம் மீன் வளமும் கடல் வளமும் பாதிக்கப்படுவதை உணர்த்தும் மீன் சிற்பமும் பார்ப்போரை சிந்திக்க தூண்டின.
பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு பேரணியை நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் ஊழியர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.