கீழக்கரை ஆக, 26
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் வீடுகள், கடைகள்,தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை Sumeet என்னும் ஊர்பஸர் தனியார் நிறுவனம் எடுத்துள்ளது.
கடந்த 2023 ஜூன் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் மூன்று மாதங்களாகப்போகும் நிலையில் தமது பணிகள் குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று (25.08.2023) நடத்தியது.
முகம்மது சதக் பொறியியல் கல்லூரி செமினார் ஹாலில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஊர்பஸர் நிறுவனத்தின் உரிமையாளர் சதக் ஜலால் தலைமை வகித்தார்.
நமது சொந்த ஊரான கீழக்கரையை முதன்மை நகரமாக்குவதே எங்களின் நோக்கமென்றும் லாபத்தை எதிர்பார்த்து ஒப்பந்தம் எடுக்கவில்லையென்றும் சதக் ஜலால் கூறினார். எங்களின் நோக்கம் முழுமையாகவும் செம்மையாகவும் நிறைவேற வேண்டுமானால் ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமென்றும் கூறினார்.
மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்து எங்கள் நிறுவனத்தின் தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வலியுறுத்தி ஜமாத்துகள், அனைத்து சமுதாய சங்கங்கள் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்து வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.
மின்ஹாஜ் ஜமாத் தலைவரும் KLK வெல்ஃபேர் கமிட்டி தலைவருமான சாகுல்ஹமீது ஆலிம், உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க உறுப்பினர் TPS சுலைமான், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சதக் இல்யாஸ், சீதக்காதி அறக்கட்டளை துணை பொதுமேலாளர் ஷேக் தாவூது, கடற்கரைப்பள்ளி சீனி இப்றாகீம் ஆகியோர் கருத்து கூறினர்.
இந்நிகழ்ச்சியில் பழையகுத்பா பள்ளி ஜமாத்,கிழக்குத்தெரு ஜமாத் நிர்வாகிகள்,கீழக்கரை ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மக்கள் டீம் காதர்,வெல்ஃபேர் அசோசியேஷன் மேலாளர் சாதிக், ஊர்பஸர் மேலாளர் ஹாஜா சரீப்,துணை மேலாளர் அகமது ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.