Spread the love

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 18

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கோபிநாத் மேற்பார்வையில் துணை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவல்துறையினர் சூளேஸ்வரன்பட்டி வ.உ.சி. நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு சரக்கு வாகனத்தில் 50 கிலோ வீதம் 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசியும், ஒரு காரில் 500 கிலோ ரேஷன் அரிசியும் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் 50 கிலோ வீதம் 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகன உரிமையாளர் குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் மொத்தம் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *