Spread the love

கீழக்கரை மே, 31

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று(31.05.2023) தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

முதலாவதாக போதை பொருள் ஒழிப்பு தினம் என்பதால் நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் அறிக்கை வாசிக்க உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

கீழக்கரை தாலுகா பழைய அரசு மருத்துவமனையை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா(எ)முத்துராமலிங்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருள் எண் 6 மீதான விவாதத்தின் போது துணைதலைவர் ஹமீதுசுல்தான் எழுந்து உறுப்பினர்களுக்கு தெரியாமலும், கலந்து ஆலோசிக்காமலும் அந்தந்த வார்டுகளுக்கான கோரிக்கை தீர்மானங்களை அஜெண்டாவில் இணைத்து விடுகிறீர்கள் என அதிகாரிகளை பார்த்து குற்றம் சாட்டினார்.

ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடைபெறும் போது உறுப்பினர்கள் கொடுக்கும் கோரிக்கை மனுவின் அடிப்படையில் தான் அஜெண்டாவில் இணைக்கப்படுவதாக தலைவர் செஹனாஸ் ஆபிதா பதிலளித்தார்.

துணைத்தலைவர்(திமுக): பொருள் 6ல் 47.10 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க தீர்மானம் வைத்துள்ளீர்கள்,இதுகுறித்து கூட்டத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டதா?

ஆணையர்: ?????

கவுன்சிலர் சூர்யகலா(கம்யூனிஸ்ட்):கீழக்கரை அம்மா உணவக நிலை என்ன?அங்கே பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் வழங்காதது ஏன்?அம்மா உணவகம் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வருவதை மேற்கோள் காட்டி பேசுகிறேன்.(வணக்கம் பாரதம் இதழில் நாம் இதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்)

சுகாதாரத்துறை ஆய்வாளர்: அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.நிலைவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பைரோஸ்பாத்திமா(திமுக): சாலையோர தள்ளுவண்டிகளை யார் மூலம் கொடுத்தீர்கள்?யாருக்கு கொடுத்தீர்கள்?நாங்கள் கொடுத்த பெயர் பட்டியல் ஏன் விடுபட்டது?

தலைவர்: நமது நிர்வாகம் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலின் அடிப்படையில் தான் சாலையோர வியாபார தள்ளுவண்டிகளை வழங்கினோம்.உறுப்பினர்கள் கொடுத்துள்ள பெயர் பட்டியல் அடிப்படையில் இனிவரும் காலத்தில் தள்ளுவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

MMK காசீம்(திமுக): எனது வார்டில் போடப்பட்ட ஃபேவர் பிளாக் சாலை குண்டும் குழியுமாக இருந்து பின்னர் அதை சரி செய்வதற்காக கற்கள் பிரிக்கப்பட்டு ரோட்டோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு நாட்கள் கடந்து கொண்டிருப்பது கமிஷனருக்கு தெரியுமா? பள்ளிகள் திறக்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அந்த பகுதியை ஆணையர் பார்வையிட்டாரா?

ஆணையர்: ????

நசீருதீன்(திமுக): 9வது வார்டுக்குட்பட்ட வடக்குத்தெரு முழுவதும் சாலைகள் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பது ஆணையருக்கு தெரியுமா?

ஆணையர்: ???

பவித்ரா(அதிமுக): எனது வார்டில் இதுநாள் வரை எந்தவொரு திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது ஏன்?

தலைவர்: உங்கள் வார்டு மட்டுமல்ல,6,21 போன்ற வார்டுகளிலும் எந்த திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.செய்யக்கூடாது என்பதல்ல,செய்வதற்கான உகந்த சூழல் அங்கே இல்லை, வார்டு எல்லை அதிகம் என்பதால் கூடுதல் நிதி ஒதுக்கி உரிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நமது பொறுப்பு காலத்திற்குள் குறிப்பிட்ட மூன்று வார்டுகளுக்கு தேவையான திட்டப்பணிகளை செய்து தருவேன்.

சுஐபு(திமுக): நகராட்சியின் நிதிநிலை 0% பூஜ்ஜியமாக உள்ளதென சொல்கிறீர்கள்.அதை சரிகட்ட என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வரி வசூல் நிலுவையில் உள்ளதென்று கூறி தப்பிக்க நினைக்காமல் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

ஆணையர்:????

பயாஸ்தீன்(திமுக): பழைய பேரூந்து நிலைய நிழற்குடையில் வைக்கப்பட்ட இலவச குடிநீர் திட்டம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது அது சரி செய்யப்படுமா?

தலைவர்: குடிநீர் கேன் மற்றும் அதற்கான உபகரண பொருட்களை உடைத்து விடுகிறார்கள்.மீண்டும் மீண்டும் அதையே செய்யும் போது அந்த திட்டத்தினால் மக்களுக்கும் பலனின்றி நகராட்சிக்கும் தேவையற்ற செலவுகள் வருவதால் அதனை அப்புறப்படுத்தி விட்டோம்.

சர்ஃப்ராஸ் நவாஸ்(திமுக): தீர்மானங்கள் பெரும்பாலும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.ஒரே பொருளை இரண்டு தீர்மானங்களில் கொண்டு வருகிறீர்கள்.ஆணையருக்கு புதிய வாகனம் வாங்க தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள்.ஊரை சுற்றி பார்க்காத ஆணையருக்கு புதிய வாகனம் தேவையா? தலைவரின் முன் அனுமதி என்ற பெயரில் பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறீர்கள்,அவசரம் என்பது வேறு. செய்கின்ற அனைத்து பணிகளுமே முன் அனுமதி என்றால் கவுன்சிலர்கள் எதற்கு?எங்களிடம் தகவல் தெரிவித்தாவது பணிகளை மேற்கொள்ளலாமே?

ஆணையர்: ???

ஷேக்உசேன்(அசகூ): அனைத்து சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த கவுன்சிலர்களான நானும் 15 வது வார்டு டெல்சியும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டிருந்தோம்.எங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்க்கவே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம்.

கூட்ட அஜெண்டா தயாரிக்கும் போது பொருள் எண்ணை வார்டு வாரியாக வரிசைபடுத்தி தயார் செய்யப்பட வேண்டும்.நகராட்சி அலுவலர்களுக்கு தெரியாவிட்டால் நாங்களே உங்களுக்கு தயார் செய்து தருகிறோம்.

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அடைத்தீர்கள்.அதை யாரோ சிலர் திறந்து விட்டதாகவும் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் கூறினீர்கள்.தற்போது அதன் நிலைபாடு என்ன?

அம்மா உணவகம் குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன.குறிப்பாக காய்கறி வழங்கும் விசயம் பேசப்படுகிறது.நாளொன்றுக்கு 911 ரூபாய் காய்கறி வழங்க டெண்டர் கொடுத்துள்ளீர்கள்.

விலைபட்டியல் கூடுதலாக உள்ளது.நகராட்சி நேரடியாகவே காய்கறி கொள்முதல் செய்து அம்மா உணவகத்திற்கு வழங்கலாமே?தினமும் 911.00 ரூபாய்க்குரிய காய்கறிகள் வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்கிறார்களா?

பொருள் 43ல் ஆணையருக்கு புதிய வாகனம் வாங்க ஒரு தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது தான், முடிந்தால் அனைத்து வகையான டெக்னாலஜி கொண்ட வாகனத்தை வாங்கி கொடுக்கலாம்? கமிஷனர் ஊரை சுற்றி பார்க்கும் லட்சணம் மக்களுக்கு தெரிந்த விசயம் தானே?

ஆணையர்: ???

சித்தீக்(திமுக): நிலுவை வரியை வசூல் செய்ய நகராட்சி அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயார்.அதே நேரத்தில் ஊருக்குள் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பீர்களா?

ஆணையர்: ???

இன்றைய கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் நகர்மன்ற ஆணையர் பேந்த பேந்த முழித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

நகர்மன்ற ஓவர்சீயர் சாம்பசிவம் இடம் மாறுதலாகி சென்றதால் அதற்கு பதிலாக செந்தில்குமார் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஜூன் முதல் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு கீழக்கரையின் தூய்மை பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள ஊர்பசர் நிறுவனத்தின் அதிகாரி சுப்பிரமணியன் தலைமையிலான குழு அறிமுகப்படுத்தப்பட்டன.

ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *