ஏப்ரல், 19
`வெயில் நேரத்துல வெளிய போகாதே, ஒடம்பு கறுத்துப்போயிடும்’, ‘நிறைய தண்ணி குடிக்கணும். இல்லைன்னா வயித்துப் பிரச்னை ஏதாவது வந்திடும்’ என்பது போன்ற அறிவுரைகளை கோடைக்காலத்தில் அதிகம் கேட்டிருக்கலாம். கோடை காலத்தில் சருமம் தடித்துக்காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல் போன்ற சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே சரும வறட்சி (Dry Skin) இருக்கும். கோடையில் அவர்களது நிலைமை மிகவும் சிரமம். ஏற்கெனவே சருமப் பிரச்னை உள்ளவர்கள் சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்… எந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம் என்பது பற்றியெல்லாம் ஒரு சிறிய தொகுப்பு!
“சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில் எலுமிச்சைச் சாறு – தயிர் – தக்காளி பேஸ்ட் அல்லது எலுமிச்சைச் சாறு – உருளைக்கிழங்கு பேஸ்ட் போன்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். எலுமிச்சையிலுள்ள ஆல்ஃபா-ஹைட்ராக்சில் அமிலம் (Alpha hydroxyl acids), வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் (Citric acid) போன்றவை சரும நிறம் மாற்றமடைவதைச் சரிசெய்யும்.
முகத்தை `பளிச்’சென ஆக்குவதற்கு, பலரும் பிளீச்சிங் செய்வார்கள். அதற்கு தேன் சிறந்த தீர்வு. வெறும் தேனையோ, பப்பாளிச் சாறு கலந்த தேனையோ தினமும் சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்தை தேனில் கலந்தும் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்திலிருக்கும் புரோமலைன் (Bromelain) என்ற என்சைம், தோலிலிருக்கும் இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சென மாற்றும். அன்னாசிப்பழம்-தேன் கலவையை இரண்டு மூன்று முறை தேய்த்துக்கொள்வது நல்லது.
சிலருக்கு கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருக்கும். புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமத்தைப் (Eventone) பெறலாம். இன்ஸ்டன்ட் பிளீச்சராக ( Instant Bleacher) இது இருக்கும். தக்காளி – தயிர் பேஸ்ட், தக்காளி – கடலை மாவு – கற்றாழை பேஸ்ட் போன்றவை மிகவும் நல்லவை.
பெண்கள், மஞ்சளுடன் கடலை மாவு சேர்த்து ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டால், வெயிலின் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். தினமும் சோப்புக்குப் பதில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது, சருமம் கருமையடைவதிலிருந்து தடுக்கும்; சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளையும் தடுக்கும்.
தேங்காய்ப்பாலில் அதிக கொழுப்புச்சத்து இருப்பதால், சருமத்துக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், நிறம் கருமையாவதையும் தடுக்கும். ஆண்கள், கற்றாழைச் சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளலாம். சந்தனத்துடன் தேங்காய்ப்பால் கலந்து, ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது முகப்பொலிவை அதிகரிக்கும். வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்தால் சிரமப்படுபவர்கள், சந்தனத்தைத் தேய்த்துக்கொண்டாலே அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டுவிடலாம்.
‘முகத்துல எண்ணெய் வழியுது’ என்பவர்கள் கடலை மாவு, ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, தினமும் முகத்தில் தேய்த்து வந்தால், அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முகத்தைப் பளிச்சென மாற்றிவிடும்.
தயிர், உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. தயிரை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, தக்காளியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சுப் பழத்தின் தோலை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்தும் பூசலாம்’.