ராணிப்பேட்டை நவ, 16
பல்வேறு மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தலா 15 பேரை கொண்ட இரு குழுவினர், திங்கள்கிழமை கேரள மாநிலம், சபரிமலைக்கு சென்றனர். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படைத்தளம் உள்ளது.
இங்கிருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் புதுவை, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களில் பேரிடர் ஏற்படும் காலங்களிலும், முன்னெச்சரிக்கைப் பணிக்காகவும் அந்தந்த மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அந்தப் பகுதிகளுக்குச் செல்வர்.
இந்த நிலையில், வரும் 17ம் தேதி முதல் 2023 ஜனவரி 20ம் தேதி வரை மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்துலட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிச்செல்வர்.
இதற்காக, சபரிமலையில் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை யினரை அனுப்புமாறு கேரள அரசு, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படைத்தளத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது. இதையடுத்து, படைப் பிரிவின் கமாண்டண்ட் அருண் உத்தரவின் பேரில், ஆய்வாளர் சுரேஷ் தலை மையில், தலா 15 பேர் கொண்ட இரு குழுவினர் திங்கள்கிழமை சாலை மார்க்கமாக கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், பம்பைக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் ஒரு குழு பம்பையிலும், மற்றொரு குழு சபரிமலையிலும் முகாமிட உள்ளனர்.