Spread the love

கள்ளக்குறிச்சி நவ, 15

மூங்கில்துறைப்பட்டு ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு தொகையாகவும் மற்றும் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவைகளை பெற்றும் வந்தனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கடுவனூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் பயிர் கடன் தரப்படும் என்றும் கூறி விவசாயிகளை அலைக்கழிப்பது மட்டுமல்லாமல் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. முற்றுகை இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் நேற்று காலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயிர் கடன் தர மறுப்பதை கண்டித்தும், உடனடியாக பயிர் கடன் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல் துறையினர் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *