நாமக்கல் அக், 31
நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகள், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கு மட்டும் தினசரி 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது. முக்கிய விற்பனை மையமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி பகுதியில் வாத்துகளை பறவை காய்ச்சல் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கேரளா முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.