தூத்துக்குடி அக், 18
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சாயர்புரத்தை சேர்ந்த மாநில காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் போதிய பணியாளர்கள் நிரப்பப்படாமல் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆகையால் புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் கடந்த 4 ஆண்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இங்கு நல்ல வருமானத்தில் வேலை பார்த்தனர். அவர்கள் தற்போது ஆலை மூடப்பட்டதால் வெளியூர்களில் சென்று குறைந்த வருவாயில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை கிடைக்க ஆலை திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்