நாமக்கல் அக், 18
நாமக்கல் அருகே உள்ள கொக்குவாரி சிங்களங்கோம்பை காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். கொல்லிமலை பகுதியில் இந்த ஆண்டு தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொல்லிமலை பகுதியை நீர் ஆதாரமாக கொண்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. முக்கியமாக மாவட்டத்தின் பெரிய ஏரியான தூசூர் ஏரி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொடர்ந்து 2-வது முைறயாக நிரம்பி நீர் கடைக்கால் வழியாக வெளியேறி வருகிறது. இதனால் அருகில் உள்ள பல்வேறு ஏரிகளும் நிரம்பி வருகின்றன.
மேலும் கனமழை பெய்ததால், கொக்குவாரி காட்டாற்றில் கற்கள் உருட்டி வரப்பட்டு, ஆற்றின் பாதைமாறி விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பொக்லைன் எந்திரம் மூலம் கொக்குவாரி ஆற்றின் நடுவே இருந்த கற்களை அகற்றி சீரமைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதையும், கரைகள் சரிசெய்யப்பட்டு உள்ளதையும் மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது நாமக்கல் உதவி ஆட்சியர் மஞ்சுளா, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, தாசில்தார்கள் சக்திவேல், செந்தில் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.