உஜ்ஜைன் அக், 11
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று மாலை அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். 12 ஜோதிர் லிங்களில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காளேஸ்வர் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.
இந்த கோயிலை மகாகாள் லோக் என்ற பெயரில் ரூ.850 கோடியில் புனரமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதன்படி ருத்ரசாஹர் ஏரிப் பகுதியில், 900 மீட்டர் நீளத்துக்கு மிகப்பெரிய நடைபாதையும், அதைச் சுற்றி 200 சிலைகளும், சிவன், சக்தி சிலைகளும் அமைக்கப்பட்டன.
மேலும் நந்தி தவார் மற்றும் பினாகி தவார் என்ற இருநுழைவு வாயில்களும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பக்தர்கள் கோயிலின் நுழைவு வாயிலில் சென்று சாமி தரிசனம் சென்று நடைபாதைக்கு செல்லும்வகையில் அமைக்கப்பட்டது.
அழகாக வடிவமைக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்களால் 108 தூண்கள், நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளன, நடைபாதைகள் அழகான நீர் ஊற்றுகள், சிவபுராணத்தை கூறும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக மகாகாள் லோக் புனரமைப்புத் திட்டத்தின் மதிப்பு ரூ.856 கோடியாகும், இதில் முதல்கட்டமாக ரூ.316 கோடிக்கு பணிகள் முடிந்துள்ளன. இந்த முதல் கட்ட கட்டமைப்புகளை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.