புதுச்சேரி அக், 5
வானொலியில் இந்தி நிகழ்ச்சி ஒலிபரப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியா பல்வேறு மொழிகள், மதங்கள், கலாசாரங்கள் கொண்ட நாடு. ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து மதம், மொழி, கலாசாரம் ஆகியவை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. மேலும் இல்லாத ஆதிக்க சாதிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில்தான் இந்தி மொழி, சமஸ்கிருதம், குலக்கல்வி ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலில் அகில இந்திய வானொலி நிலையம் மூலம் கடந்த சில தினங்களாக இந்தி நிகழ்ச்சிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளை கிராமப்புற மக்களும், விவசாயிகளும் கேட்டு பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வானொலி நிலைய நிகழ்ச்சிகளை இந்திக்கு மாற்றி இருப்பது மிக, மிக கண்டனத்திற்குரியது. இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் வானொலி நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.