கோயம்புத்தூர் அக், 4
பொள்ளாச்சியில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள், கரும்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயுத பூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் மாவிலை தோரணம் கட்டி வழிபடுவார்கள்.
மேலும் வாழைக்கன்று, கரும்பு வைத்தும் பூஜை செய்வார்கள். இதனால் சத்திரம் வீதி, காந்தி மார்க்கெட், தேர்நிலை திடல் மார்க்கெட் பகுதிகளில் கரும்பு, வாழைக்கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அங்கு குவிந்த பொதுமக்கள் அவற்றை வாங்கி சென்றனர். இதன் காரணமாக சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில்லறை விலைக்கு ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30 க்கு விற்பனை ஆனது. பூக்கள் அதிக விற்பனை கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விற்பனை குறைந்து இருந்த நிலையில், இந்த ஆண்டு கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மேலும் ஆயுதபூஜையையொட்டி காய்கறிகள், பூக்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.