Spread the love

கீழக்கரை செப், 20

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் பாரதிநகர் கடற்கரை பகுதியில் 13ம் நூற்றாண்டில் சிவனாக வணங்கப்பட்ட நந்தி (காளை) சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு கூறியதாவது,திருமலை சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில் (கி.பி. 1664 -1674) கீழக்கரையில் உள்ள தொன்மையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பூஜைக்கு தேவதானமாக நிலம் கொடுத்துள்ளார்.

கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள 500 ஆண்டுகளுக்கு முந்தைய அபூர்வ அரிய காளை லிங்கம் என்ற பெயருடைய கோயில் எங்கே உள்ளது, என ஆய்வு செய்தேன். ஆனால் கிடைக்கவில்லை. சுனாமி போன்ற பெரிய சீற்றத்தால் மணல் மேடுகள் ஏற்பட்டு கோயிலும் மணலுக்குள் புதைந்திருக்கலாம். பிற்காலத்தில் அப்பகுதி முழுவதும் தென்னந் தோப்புகள் ஆகிவிட்டன. பெரிய மணல் மேட்டை ஒட்டிய தென்னந்தோப்பிற்குள் காளை லிங்கத்தை மட்டும் பார்க்க முடிந்தது. படுத்த நிலையில் உள்ள காளை சிலையின் நீளம் 105 செ.மீ. , அகலம் 33 செ.மீ ,உயரம் 49 செ.மீ., இந்த நந்தி சிலை 13ம் நூற்றாண்டை சேர்ந்தது என கருத முடிகிறது. காளையின் பின் தொடை பகுதியில் அபூர்வமாக ஓம் பசுவதி என்ற வாசகம் உள்ளது. நேபாளத்தின் காத்மாண்டுவில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான பசுபதிநாதர் கோயில் உள்ளது.

‘பசுபதி’ என்பது ஆன்மாக்களுக்கு தலைவனாகிய சிவபெருமானை குறிப்பதாகும். காத்மாண்டுவில் சிவபெருமான் விலங்கு உருவத்தில் இருந்தாராம். விலங்குகளின் கடவுள், அதாவது பசுபதி நாதர் என போற்றப்பட்டார்.முற்காலத்தில் மாயா என்பவர் இப்பகுதியில் குளம் அமைத்து சிவனை நோக்கி தவம் இருந்ததால் இந்த ஊரானது மாயாகுளம் என்றழைக்கப்பட்டது. மாயா என்பவர் புத்தரின் தாயார். புத்தர் பிறந்த வம்ச அரசர்கள் தான் காத்மாண்டுவில் உள்ள பசுபதி நாதர் கோயிலை கட்டியுள்னர். எனவே காளை வடிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாயா தேவி வழிபட்டிருக்கலாம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *