நாமக்கல் ஆகஸ்ட், 1
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இவற்றில் சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக சத்துணவு திட்டத்துக்கும், கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும், உள்ளூர் தேவைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்கிறது. கடந்த மாதம் 1-ம் தேதி 550 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை நேற்று முன்தினம் 4 ரூபாயாக சரிவடைந்தது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் முட்டை விலை 150 காசுகள் சரிவடைந்து இருப்பதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.