திருப்பூர் செப், 16
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோமனூர் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். இதில் சோமனூர் சங்க நிர்வாகிகளான துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி, கிளை நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், உயர்த்திய மின் கட்டணத்தை சாதாரண விசைத்தறிக்கு முழுமையாக விலக்கு அளித்து விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாதாரண விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டண அளவில் கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தை சாதாரண விசைத்தறியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக முழுமையாக மின் கட்டணம் கட்டாமல் இருந்து எதிர்ப்பை தெரிவிப்பது, உயர்த்திய 30 சதவீதம் மின் கட்டணத்தையும் ஆண்டுக்கு 6சதவீதம் உயர்வையும் முழுமையாக விலக்கு அளித்து அரசு அறிவிக்கும் வரை இன்று காலை 6 மணியில் இருந்து விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.