கள்ளக்குறிச்சி செப், 14
கள்ளக்குறிச்சி அருகே 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மணி மற்றும் முக்தா ஆகிய ஆறுகள் வழியாக பாயந்தோடும் தண்ணீர் இந்த அணைக்கு வரும். இதன் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் தற்போதைய நீர் மட்டம் 18 அடியாக உள்ளது.
மேலும் மணிமுக்தா அணையை அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் 2 ல் சேர்க்கப்பட்டு உபரி நீர் திறந்து விடுவதற்கு புதிதாக ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் செல்லும் ஆறு, கரை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய குழு ஆய்வு இந்த நிலையில் புதுடெல்லியில் இருந்து அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் 2-ன் மத்திய அணை பாதுகாப்பு குழுவை சேர்ந்த அணை வடிவமைப்பு ஓய்வு பெற்ற சேர்மன் டி.கே.மிட்டல், அணை ஆய்வாளர் நிபுணர் வத்சவா, அணை பாதுகாப்பு நிபுணர் முராரி ரத்தினம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் 2-ன் குழு உறுப்பினர் செல்வம், ருஷ்தமல்லி, சீனிவாசன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று கோமுகி அணையை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் 2-ன் திட்ட இயக்குனர் பர்கத் நிஷா, செயற்பொறியாளர் வீரலட்சுமி, உதவி செயற்பொறியாளர் ஜான்சிராணி மற்றும் பொதுப்பணித்துறை கடலூர் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், விருத்தாசலம் செயற்பொறியாளர் அருணகிரி, கள்ளக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர்கள் பிரபு, பிரசாத் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.