Spread the love

சென்னை செப், 9

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதையடுத்து தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதன் பிறகு அவர் அங்கிருந்து அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரவனில் தங்கி இரவில் ஓய்வெடுத்தார். 2-வது நாள் பாதயாத்திரையை நேற்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தொடங்கினார்.

நேற்று ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரிக்கு சென்று இரவில் அங்கேயே தங்கினார். 2-வது நாள் பாதயாத்திரையில் ராகுல்காந்தி சுமார் 20 கி.மீ. நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7 மணிக்கு தனது பாதயாத்திரையை கல்லூரியில் இருந்து தொடங்கினார். வில்லுக்குறியில் மலர் பாதை அமைத்து ராகுலுக்கு வரவேற்பு அளிக்கபட்டது.

நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார். 3வது நாள் நடைபயணத்தில் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியனுடன் கலந்துரையாடினார்.

மேலும் திறந்தவெளியில் பாரம்பரிய கிராமத்து உணவு சமைப்பது குறித்த வீடியோக்களுக்காக பிரபலமான யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனலின் உறுப்பினர்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *