திருமங்கலம் ஆக, 29
இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலம் வேங்கடசமுத்திரம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் திருமங்கலம் பாண்டியன் நகர் அருகே உள்ளது.
இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் விதமாக திருமண மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது இதையடுத்து மண்டபம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய ப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 3.70 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்த பூமி பூஜையில் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், வினோத் மற்றும் நிர்வாக அதிகாரி ரம்யா சுபாஷினி, தக்கார் சக்கரை அம்மாள், திருமங்கலம் அறநிலைய துறை ஆய்வாளர் சாந்தி, கோவில் உதவி அலுவலர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.