கீழக்கரை மே, 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாய்கள் தொல்லையால் மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். கடந்த சில வருடங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய்கள் கடித்து குதறியிருக்கின்றன.
சிறுகுழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நாய்க் கடிக்கு ஆளாகியுள்ளனர். இன்னமும் நாய்களின் அச்சுறுத்தலால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். உடனடியாக நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கீழக்கரை நகராட்சிக்கு பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
காது கேளாதோரை போல நகராட்சி நிர்வாகம் மௌனிப்பதால் நாய்கள் பிரச்சினையை நேரடியாக தமிழக முதல்வருக்கு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இதில் மூவாயிரம் அஞ்சல் அட்டைகள் தலைமை தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.சமூக ஆர்வலர்களான சதக் இலியாஸ்,அஜிஹர்,முகைதீன் இப்றாகீம், நசுருதீன்,நகர்மன்ற உறுப்பினர் ஷேக் உசேன் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்.