சென்னை ஆகஸ்ட், 25
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஸ்ரீமாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் என்ற கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் தரமற்ற உணவு பொருட்களும், சமையல் எண்ணையும் விற்பனை செய்படுவதாக உணவுப்பாதுகப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார்கள் வந்தது. புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதிஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த கடைக்குள் பூமிக்கு அடியில் 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத சம்ப் அமைத்து அதில் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணை ஆகியவற்றை கலப்படம் செய்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடையில் இருந்த கலப்பட எண்ணையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் முறையான உரிமம் பெறாமல் ஆயில் கிடங்கு வைத்திறந்த குற்றத்திற்காகவும், சில்லறை விற்பனைக்கு உரிய அங்கீகாரம் பெறாமல் இருந்த குற்றத்திற்காகவும், அந்த கடை செயல் பட தடை விதித்த அதிகாரிகள் கடையை தற்காலிகமாக சீல் வைத்தனர்.
இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ் குமார்,
இங்கு இவ்வளவு பெரிய கலப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்கு சிறை தண்டணையுடன் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு தண்டனை கிடைக்கும். 2020ம் ஆண்டு உணவுப்பொருள் பாதுகாப்புச் சட்டப்படி எண்ணைய் வகைகளை சில்லரையில் விற்பனை செய்யக்கூடாது என்றும் இங்கு 100 சதவீதம் சுத்தமில்லாத எண்ணைய் சில்லறையாக விற்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 1500 லிட்டர் சூரிய காந்தி எண்ணையும், 3 ஆயிரம் லிட்டர் பாம் ஆயிலும் இந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறிய சதீஷ்குமார், மொத்தம் 4400 லிட்டர் கலப்பட எண்ணெய்யை கைப்பற்றி உள்ளதாகவும், உணவு பொருளும் உணவகமும் தரமற்ற முறையில் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டுகோள் விடுத்தார்