கீழக்கரை டிச, 15
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்தின் படி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் கூட்டப்பட வேண்டுமென்பது அரசின் வழிகாட்டல் விதிமுறையாகும்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க இன்று காலை 11.30 மணிக்கு கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் உறுப்பினர் சித்ராதேவி குழந்தைகளின் பாதுகாப்பு அம்சம் குறித்த விழிப்புணர்வு கருத்தினை எடுத்துரைத்தார்.
19வது வார்டு கவுன்சிலர் மூர் நவாஸ் குறுக்கிட்டு கீழக்கரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் குறித்து தணிக்கை செய்ததுண்டா? எனக்கேட்டவர்,ஒரு வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி நெரிசலில் தவிக்க வைப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்றும் வினா தொடுத்தார்.
நகர்மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் குறுக்கிட்டு கடந்த இரண்டு கூட்டங்களில் பேசப்பட்ட விசயத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?எனக்கேட்டவர், துறை சம்பந்தப்பட்ட எந்த அதிகாரிகளும் இல்லாமல் இந்த கூட்டத்தை எப்படி நடத்த முடியும்? என்றவர் இந்த கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோரினார்.
20வது வார்டு கவுன்சிலர் சேக்உசேன் மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் பாதுஷா ஆகியோர் எழுந்து நின்று இந்த கூட்டத்தை புறக்கணித்த துறை சார்ந்த அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்களாகிய நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறி வெளியேறினர்.
இவர்களோடு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,துணை தலைவர் ஹமீது சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்களான மீரான் அலி, MMK காசீம், மூர் நவாஸ், பைரொஸ் பாத்திமா, டல்சி, சூர்யகலா, விஜயலட்சுமி, பவித்ரா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் அதிகாரிகளை கண்டித்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஜஹாங்கீர் அரூஸி.
மாவட்ட நிருபர்.
ராமநாதபுரம்.