சென்னை நவ, 30
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காரணமவும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்கள் போதுமான அளவு மழையை பெற்றிருக்கின்றன. இதனால் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணை மற்றும் ஏரியிலிருந்து நீர் திறக்கப்படுவதால் கரையோரம் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அதேபோல காஞ்சிரபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மழையின் அளவை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.